பாவை கல்வி நிறுவனங்களின் தமிழ் மன்றம் சார்பாக 10.04.2024 அன்று ‘அவ்வையின் ஆத்திச்சூடி; அகவாழ்வுக்கோர் அரிச்சுவடி’ என்ற தலைப்பில் பாவை பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு சொற்போர் – இறுதிச்சுற்று ‘பிரகதி அரங்கத்தில்’ நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தலைவர் திரு CA N.V. நடராஜன் அவர்கள் தலைமையேற்று தலைமையுரையாற்றினார். அவ்வுரையில் தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்து சில கருத்துக்களை வழங்கினார். தமிழ் மொழியை நாம் வளர்க்கவில்லை, தமிழ் மொழிதான் நம்மை வளர்க்கிறது என்று கூறினார். மேலும், நம் கல்லூரியில் தொழில்நுட்பத்தை தமிழ் மொழியோடு இணைத்து ஆர்வத்தோடு கற்பித்து வருகிறோம் என்று தலைமை உரையாற்றினார். இச்சொற்போர் நிகழ்விற்கு நடுவராக வருகைப் புரிந்த சிறப்பு விருந்தினர் அவர்களை நிறுவனர் தலைவர் அறிமுகப்படுத்தினார். ‘கவிஞாயிறு’ என அழைக்கப்படும் புலவர் பெ. பரமேசுவரன் ஐயா அவர்கள் 38 ஆண்டுகள் தமிழாசிரியராக பணியாற்றியுள்ளார். சென்னையில் அமைந்துள்ள மணலி தமிழ் கல்லூரியில் பயின்று, பட்டிமன்றங்கள் கவியரங்கங்களில் சிறப்பாக பங்காற்றியுள்ளார். தமிழ் இலக்கண நூல்களான தொல்காப்பியம், நன்னூல் போன்றவற்றை ஆசிரியர் பலருக்கு கற்பித்துள்ளார். தான் வாழும் பகுதியில் வீற்றிருக்கும் மாரியம்மனுக்கு “இராசிபுரம் எல்லை மாரியம்மன் பிள்ளைத்தமிழ்” என்ற இலக்கிய நூலினை உருவாக்கி, “கூட்டாஞ்சோறு” என்ற நூலினையும் இயற்றி கவி விருந்தினைப் படைத்துள்ளார்.
சிறப்பு விருந்தினர் புலவர் வெ. பரமேசுவரன் அவர்கள் பாரதியின் குயில் பாட்டினையும், பிள்ளைத்தமிழ் இலக்கியம் பற்றியும் உரை நிகழ்த்தினார். இவ்வண்ணம் மாணவர்களுக்கான சொற்போர் இனிதே தொடங்கியது. 19 மாணவ மாணவியர் தங்கள் சொற்போர் ஆற்றலை அழகாக வெளிப்படுத்தினர். 500 மாணவர்கள் பார்வையாளராக பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர் அவர்கள், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களின் திறமையினைப் பாராட்டி பரிசினை வழங்கினார். பாவை கல்வி நிறுவனங்களில் தாளாளர் திருமதி மங்கை நடராஜன் அவர்கள் சொற்போரில் பங்குபெற்ற மாணவர்களின் திறமையைப் பாராட்டி மேன்மேலும் வளர வாழ்த்துரை வழங்கினார். இத்துடன் சொற்போர் நிகழ்வானது தேசிய கீதத்துடன் நிறைவுற்றது.